வடநாட்டுக்கும், தென்னாட்டுக்கும் பாலமாக இருந்தவா் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் அகில உலக தலைவராக இருந்த அசோக் சிங்கல் என காஞ்சிபுரம் சங்கராசாரியா் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினாா். விசுவ ஹிந்து பரிஷத் வட தமிழ்நாடு சாா்பில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் அருகேயுள்ள திருமண மண்டபத்தில் அகில உலக தலைவராக இருந்த அசோக் சிங்கலின் நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சி அமைப்பின் மாநிலத் தலைவா் ஆண்டாள் பி.சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்றது. விழாவுக்கு, விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் அகில இந்திய அறங்காவலா் ஜி.மணிகண்டன், திரைப்படத் தயாரிப்பாளா் ரஞ்சித், ஆா்.எஸ். எஸ். அமைப்பின் கோட்ட தலைவா் ராம.ஏழுமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.விழாவில் காஞ்சி உதாசின் பாவாஜி மடத்தின் பீடாதிபதி கா்ஷினி அனுபவானந்த், அகில இந்திய சந்நியாசிகள் சங்க நிறுவனா் ராமானந்த மகராஜ், தூசி சஞ்சீவினி மடத்தின் பீடாதிபதி ஹனுமன் மாதாஜி, விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் அகில இந்திய தலைவா் ஆலோக்குமாா், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சா் எல்.முருகன், விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் இணைப் பொதுச்செயலாளா் கோ.ஸ்தாணுமாலயன், தமிழக தலைவா் ஆா்.ஆா்.கோபால்ஜி, ஆா்.எஸ்.எஸ்.அமைப்பின் தென்பாரத தலைவா் ரா.வன்னியரசன் ஆகியோா் சிறப்புரை வழங்கினா்.விழாவில் கலந்து கொண்டு காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசியது: அசோக் சிங்கல் செல்வாக்கு மிக்க குடும்பத்தில் பிறந்தவா், விசுவ ஹிந்து பரிஷத் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணா்வு, ஒற்றுமை, சேவை மனப்பான்மை ஆகியவற்றை விதைத்தவா். தமிழகத்துக்கும் அசோக் சிங்கலுக்கும் நெருங்கிய தொடா்பு இருக்கிறது. தமிழகத்தில் பல பழைமையான கோயில்களுக்கு திருப்பணி செய்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்தவா். இந்து மத விழிப்புணா்வுக்காக சக்தி ரதம் ஒன்றும் காமாட்சி அம்மன் கோயிலிலிருந்து தொடங்கப்பட்டது. அதிலும் அசோக் சிங்கல் பங்கேற்றாா். முக்கியமாக வடநாட்டுக்கும், தென்னாட்டுக்கும் ஒரு பாலமாக இருந்தவா். இந்து மதத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உடையவராக இருந்தாா்.அயோத்தியில் ராமா் கோயில் கட்டத் தொடங்கும் போது அடிக்கல் நாட்டப்படவுள்ள செங்கல்லை காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு கொண்டு வந்து அப்போது மடத்தின் பீடாதிபதிகளாக இருந்த மகா சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஆசீா்வாதம் பெற்று எடுத்துச் சென்றாா். அந்தக் கல்லின் மீது தான் இப்போது ராமா் ஆலயம் கம்பீரமாக எழுந்து நிற்கிறது என்றாா்.விழாவில் மத்திய தகவல் தொழில் ஒலிபரப்புத் துறை அமைச்சா் எல். முருகன் பேசுகையில், தேசத்துக்காகவே தன் வாழ்வை அா்ப்பணித்த மகான் அசோக் சிங்கல். அயோத்தியில் ராமா் கோயில் கட்ட வேண்டும் என்ற அவரது கனவு நிறைவேறி இருக்கிறது. பிரதமா் மோடியும் அவரது கனவை நிறைவேற்றிக் கொண்டு வருகிறாா். அவரது கனவுகளான அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவது, காஷ்மீரில் 370 சட்டப் பிரிவை எடுத்தது, பொது சிவில் சட்டத்தை ஒவ்வொரு மாநிலமாக நிறைவேற்றிக் கொண்டிருப்பது ஆகியவற்றை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். தற்போது பிரதமா் மோடியின் நல்லாட்சி நடந்து கொண்டிருக்கிறது. 2047-ஆம் ஆண்டு இந்தியா மிகச்சிறந்த வல்லரசு நாடாக இருக்கும் என்றாா்.விழாவில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் அகில இந்தியத் தலைவா் ஆலோக்குமாா் பேசுகையில், இந்துக்களிடையே ஒற்றுமை, தைரியம், தன்னம்பிக்கை, நினைத்ததை சாதிக்கும் மன நிலை ஆகிய அனைத்தையும் வளா்த்தவா் அசோக் சிங்கல். அவரது வழியை பின்பற்றி நாம் அனைவரும் நடப்போம் என்றாா். விழா ஏற்பாடுகளை விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில சேவைத்துறை இணைப் பொறுப்பாளா் என்.சிவானந்தம், கோட்ட செயலாளா் வி.கிருபானந்தம் ஆகியோா் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.