தொடர் விடுமுறை காரணமாக, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால் ஏற்காட்டின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வெகுநேரம் வாகனத்துக்குள்ளேயே தத்தளித்த சுற்றுலா பயணிகளும் உள்ளூர் மக்களும் அவதிக்குள்ளாகினர்.தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். குறிப்பாக விடுமுறை தினங்களில் தமிழகம் மட்டுமின்றி கேரளம், ஆந்திரம், கர்நாடகம், பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சுற்றி பார்த்து செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. ஆனால் ஏற்காட்டிற்கு கணிசமான சுற்றுலா பயணிகளே வந்திருந்தனர். இந்த நிலையில் காலாண்டு விடுமுறை நிறைவு நாள் மற்றும் வார இறுதி நாள் என்பதாலும் தொடர் விடுமுறை காரணமாக நேற்று முதலே ஏற்காட்டை சுற்றி பார்க்க அதிக அளவில் சுற்றுலா பணிகள் குவிந்தனர். அவர்கள் ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களான அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, சூழல் சுற்றுலா பூங்கா, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, ஜென்ஸ் சீட், பொட்டானிக்கல் கார்டன், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில் போன்ற இடங்களை குடும்பத்துடன் கண்டு ரசித்தனர். இந்நிலையில் ஏற்காட்டிற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் தங்களுடைய சொந்த வாகனத்திலேயே வருகை தருகின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் ஏற்காட்டின் முக்கிய சாலைகளான அண்ணா பூங்கா சாலை, படகு இல்லம் சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு சுமார் அரை மணி நேரம் வாகனத்திலேயே காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. முக்கியசாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் உள்ளூர்மக்களும் தங்களுடைய அன்றாட அத்தியாவசிய தேவைக்குக்கூட அந்த சாலையை கடக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து நெரிசலால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் ஏற்காடு போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய போதுமான அளவு போலீசார் இல்லாததே இந்த போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.