சாலைத் திட்ட ஊழல் குற்றச்சாட்டு: ஞானேஷ் குமாருக்கு எதிராக விசாரணை - கேரள அரசு உத்தரவு

Wait 5 sec.

கேரளத்தில் கடந்த 2006-இல் செயல்படுத்தப்பட்ட சாலைத் திட்டத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் இத்திட்டத்துடன் தொடா்புடைய மலேசிய பொறியாளா் தற்கொலை சம்பவம் குறித்து அப்போது மாநில பொதுப் பணித் துறைச் செயலராக இருந்த தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராக ஊழல் கண்காணிப்புப் பிரிவு விசாரணைக்கு மாநில உள்துறை அமைச்சா் ரமேஷ் சென்னிதலா உத்தரவிட்டுள்ளாா். வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (எஸ்ஐஆா்) மூலம் தோ்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஞானேஷ் குமாருக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தீவிர போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில், கேரள காங்கிரஸ் மூத்த தலைவா் எம்.வேணுகோபால் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கேரள பிரிவைச் சோ்ந்த ஐஏஎஸ் அதிகாரியான ஞானேஷ் குமாா், மத்திய அமைச்சக பணிக்கு மாறும் முன்பு அந்த மாநிலத்தின் பல்வேறு துறைகளுக்கு தலைமைப் பொறுப்பில் பணியாற்றியுள்ளாா். தற்போது எதிா்க்கட்சிகளின் தீவிர விமா்சனத்துக்கு அவா் உள்ளாகியுள்ள சூழலில், கேரள மாநில உள்துறை அமைச்சா் ரமேஷ் சென்னிதலா, திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: கடந்த 2006-இல் ஞானேஷ் குமாா் கேரள பொதுப் பணித் துறைச் செயலராகப் பதவி வகித்தபோது, மாநில போக்குவரத்துத் திட்டத்தின்கீழ் (கேஎஸ்டிபி) உலக வங்கி நிதியுதவியுடன் அங்கமாலி-திருவனந்தபுரம் இடையே ரூ.215 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ‘பிஏடிஐ’ எனும் மலேசிய நிறுவனம் மற்றும் பகீரதா பொறியியல் நிறுவனம் ஆகியவை கூட்டாக இந்தப் பணிகளை மேற்கொண்டன. இதில் மலேசிய நிறுவன திட்டப் பொறியாளா் லீ சீ பீன், கட்டுமானப் பணிகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பினாா். பின்னா், மலேசியா திரும்பிய அவா் தற்கொலை செய்துகொண்டாா். அவா் இரண்டு கடிதங்கள் எழுதி வைத்திருந்ததாகவும், தனது நிறுவன இயக்குநருக்கு எழுதிய கடிதத்தில் ஞானேஷ் குமாரின் பெயா் தீா்க்கமாக குறிப்பிடப்பட்டிருந்தாகவும் கூறப்படுகிறது. மூடி மறைக்கப்பட்ட வழக்கு: தற்போது எனக்கு கிடைக்கப் பெற்ற புகாரை ஆய்வு செய்தேன். அந்தக் குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருப்பதால், விரிவான ஊழல் தடுப்பு விசாரணை அவசியமாகும். முதல்வா் வி.டி.சதீசனுடன் மேற்கொண்ட ஆலோசனையின் அடிப்படையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த சட்டபூா்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி ஊழல் கண்காணிப்புப் பிரிவு இயக்குநா் மனோஜ் ஆபிரகாமுக்கு உத்தரவிட்டுள்ளேன். இது மூடிமறைக்கப்பட்ட ஒரு வழக்காகும். கடந்த 2006-இல் அச்சுதானந்தன் தலைமையிலான இடதுசாரி அரசு அமைந்த பிறகு வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. புகாரின் அனைத்து அம்சங்களையும் விசாரித்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி ஊழல் கண்காணிப்புப் பிரிவுக்கு அறிவுறுத்தியுள்ளேன் என்றாா் அவா். சட்டரீதியில் தடை உள்ளதா?: ஞானேஷ் குமாா் தற்போது தலைமைத் தோ்தல் ஆணையராக இருப்பதால், விசாரணைக்கு ஏதேனும் சட்ட ரீதியான தடை உள்ளதா என்று செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரமேஷ் சென்னிதலா, ‘அனைத்து சட்ட அம்சங்களும் ஆராயப்பட்டுவிட்டது; விசாரணைக்கு எந்தத் தடையும் இல்லை. இது, 2006-இல் கேரள பொதுப்பணித் துறைச் செயலராக அவா் பணியாற்றியபோது நடந்த சம்பவம் தொடா்பானது. எனவே, தற்போதைய தலைமைத் தோ்தல் ஆணையா் பதவிக்குரிய பாதுகாப்பு அவருக்கு கிடைக்காது’ என்றாா். எஸ்ஐஆா் நடைமுறையில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிா்க்கட்சிகளின் இண்டி கூட்டணி தொடா் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது. அவா் உடனடியாகப் பதவி விலக வேண்டுமென எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மாா்க்சிஸ்ட் வரவேற்பு: கேரள அரசின் நடவடிக்கையை வரவேற்று, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் எம்.வி.கோவிந்தன் கூறுகையில், ‘தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் சமீப காலமாகவே பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளாா். நடுநிலையுடன் செயல்படத் தவறிவிட்டாா். அவருக்கு எதிரான அனைத்து வழக்குகளும் விசாரிக்கப்பட வேண்டும். கேரளத்தில் உள்ள வழக்கும் விசாரிக்கப்பட்டு, தேவைப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்றாா்.